ஸத்யவிரத க்ஷேத்திரமான திருக்கச்சியில் பகவான் தரிசனத்திற்காக பிரம்மா சரஸ்வதி இல்லாமல் தனியே வேள்வி செய்ய, கோபமுற்ற சரஸ்வதி, வேகவதி நதியாக பெருக்கெடுத்து வந்து யாகத்தை அழிக்க முற்பட, பெருமாள் அணைபோல் குறுக்கே சயனித்து காத்தார். இதனால் இந்த ஸ்தலத்திற்கு வேக சேது என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே வேகவதியணை என்று மாறி பின்னர் வெஃகணை என்றும் தற்போது 'வெஃகா' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் யதோத்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்னும் திருநாமங்களுடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பது திருநாமம். பிரம்மா, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், கணிகண்ணன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
கணிகண்ணணன் என்ற சீடனுக்காக திருமழிசையாழ்வார் ஊரை விட்டே புறப்படும்போது, பகவானையும் அழைக்க, அவரும் தனது பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு புறப்பட்டார். பின்னர் திரும்பிய ஆழ்வாருடன் பெருமாள் திரும்பினார். ஆழ்வார் சொன்னதைச் செய்ததால் பகவான் 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். அவ்வாறு திரும்பியபோது பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்தார்.
முதலாழ்வார்கள் மூவருள் முதல்வரான பொய்கையாழ்வார் இங்கே உள்ள பொய்கை புஷ்கரணியில் இருந்த ஒரு பொற்றாமரையில் அவதரித்தார். அதனால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
திருமங்கையாழ்வார் 6 பாசுரங்களும், பேயாழ்வார் 4 பாசுரங்களும், திருமழிசையாழ்வார் 3 பாசுரங்களும், பொய்கையாழ்வார் ஒரு பாசுரமும், நம்மாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 15 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|